Friday 8 December 2017

ஒரு எழுத்தாளரின் பதிவில் தபால் அலுவலகம்……..

ஒரு எழுத்தாளரின் பதிவில் தபால் அலுவலகம்……..

ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை, ஒரு வாரத்திற்கு 6 நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை என்ற வரையறுக்கப் பட்ட விதிமுறைகளை தாண்டி, இப்பொழுது ”தினமும் இரவு 8 மணி வரை வேலை செய், ஞாயிறு அன்றும் அலுவலகம் வா” என்று அதிகார வர்க்கம் அலப்பறை செய்து கொண்டு இருக்கிறது.
   தனக்கு லாபம் வேண்டும் என்பதற்காக, தனிநபரோ, தனியார் நிறுவனங்களோ தன் கீழ் வேலை பார்ப்பவர்களை கசக்கி பிழிந்து, நியாய அநியாயம் பார்க்காமல். மனிதாபமானமின்றி நடந்து கொள்வதை போல அரசும், அதிகாரிகளும் நடந்து கொள்வது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. சேவைக்கு, சிக்கனதிற்கு, ஒழுங்கிற்கு எடுத்துகாட்டாக செயல்பட்ட தபால் துறை இன்று எதை நோக்கி பயணிக்கிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

சரி,சரி விஷயத்திற்கு வருவோம். அரசும் அதிகாரவர்க்கமும் நம்மை சரியாக  புரிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ, ஒரு எழுத்தாளர் தபால் துறையை பற்றி தன் கதையில் சரியாக பதிவு செய்து இருப்பதை உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம்.

  (ஆனந்த கீதம் என்ற மாத நாவலில் முத்துலட்சுமி ராகவன் அவர்கள் எழுதி உள்ளதில் சிலவற்றை அப்படியே தந்துள்ளோம்.)

ஈ.டி.டி.ஏக்கள் நிலையை உள்ளபடியே பதிவு செய்திருக்கின்ற அவருக்கு நம் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

             *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
     “தபால் முத்திரைகளை பதிப்பது ஒரு தனி கலை. அதிவிரைவாக முத்திரை செய்ய, தேர்ந்த பயிற்சி பெற்ற தபால் துறையினரால்தான் முடியும். அங்குள்ள பணியாளர்கள் அதிவிரைவில் தெளிவான முத்திரை பதிப்பதில் வல்லுனர்கள். அப்படி பதிக்கும் போது தபால் முத்திரைக்கான கருப்பு மை கைகளிலும் உடைகளிலும் படியாதபடி லாகவமாக கையாள வேண்டும். தபால் துறையின் கருப்பு மை எளிதில் அழியாது.  என்ன ஒன்று…. முத்திரை பதிப்பதில் இத்தனை நுணுக்கமான அணுகுமுறைகள் இருக்கின்றன என்பது முத்திரை பதிப்பவர்களுக்கும் தெரியாது…. மேலதிகாரிகளுக்கும் தெரியாது.

       மடிப்பு கலையாத நேர்த்தியான உடையுடன் வரும் மேலதிகாரிகளின் வாயிலிருந்து வரும் ஒரு சிறு பாராட்டு போதும்… தபால் துறையின் கடைநிலை ஊழியர்கள் மகிழ்ந்து பரவசப் பட்டுப் போக……… ஆனால் அந்த பரவசம் அவர்களுக்கு கிடைத்ததேயில்லை!...................... அதிகாரத்தை பிரயோகிக்கும் அதிகார மேல் மட்டம் கடைநிலை ஊழியரைப் பற்றி நினைப்பதேயில்லை என்பதே நிதரிசனமான உண்மை. அவர்களின் சிந்தனைகளெல்லாம் துறையின் வரவு செலவு கணக்கிலேயே மையமிட்டு கொண்டிருக்கும்……”

     “தபால் அலுவலகத்தில் வொர்க் லோடு அதிகம்… வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஆபிசில என்ன வேலை இருக்குன்னு சொல்லிட்டு போயிருவாங்க … உள்ளே வந்து ஒரு நாள் உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்… இது மென்னியை பிடிக்கிற வேலையின்னு.. புராதன ஆபிஸ்தான் இது. கட்டிடத்தில் மட்டுமில்லை… ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனிலும் அப்படித்தான்… வேலை நேரத்தில் சீட்டை விட்டு எழுந்திருக்க முடியாது……” 

     ”இதுதான் என் வேலை  என்று அளந்து வேலை பார்க்காமல், ஆத்மார்த்தமாக வேலை பார்க்கும் தபால் துறை ஊழியன் அவன்... இங்கு பார்க்கும் வேலையை வேறு எங்கு பார்த்தாலும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கலாமே என்ற எண்ணம் தோன்றும். கட்டிட துறையிலிருந்து, பிளம்பர், எலக்ட்ரீசியன் என்று தொழில் தெரிந்த அத்தனை பேரும் வேலைக்கேற்ற ஊதியம் வாங்கிக் கொண்டிருக்க…. ஐந்து மணி நேரம்தான் என்று வரையறுக்கப்பட்ட  வேலை நேரத்தைப் பற்றிப் பேச்சே எடுக்காமல், ஆபிஸ் திறப்பதில் இருந்து, மூடுவது வரை அயராமல் உழைக்கும் ஈ.டி.டி.ஏ-க்களுக்கு என்ன கிடைக்கிறது…? ஐயா போஸ்ட் ஆபிசில வேலை செய்கிறாரு என்ற பெருமை மட்டும்தான் கிடைக்கிறது.”

   பணி பாதுகாப்பு, பென்சன் என்ற ஏதுமின்றி தபால் துறையின் அஸ்திவாரமாக உழைக்கும் அடிமட்ட ஊழியர்கள்தான் கிராமப்புறங்களில் தபால் துறையின் சேவையை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்…. அவர்களைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காமல் கோடிக் கணக்கில் பணத்தை கொட்டி கம்யூட்டர்களை இறக்குமதி செய்து துறையை நவீன மயம் போல காட்ட முனைந்து கொண்டிருக்கிறது தபால் துறை..!.”

     ”நிரந்தரப்படுத்தப் படாத வேலையில் இருக்கிற நினைவின்றி, வாய் நிறைய சிரிப்பும், பேச்சுமாக அலுவலகத்திற்கு உயிர்ப்பூட்டிக் கொண்டிருப்பது ஈ.டி.டி.ஏ ஊழியர்கள்தான்.”

    லீவு கிடைக்காத அவலம், அலுவலக கணக்கை முடிப்பதில் உள்ள சிக்கல் என பலவற்றை பதிவு செய்த கதை ஆசிரியர் கடைசியாக இப்படி தபால் அலுவலக ஊழியர்களின் அவல நிலையை விளக்கி இருப்பார்.

     “அய்யே!.. யாருக்கு வேணும் போஸ்ட் ஆபிசில் வேலை பார்க்கிற மாப்பிள்ளை… இருபத்தி நாலு மணி நேரமும் ஆபிசே கதின்னு கிடக்கனும்… வருசத்துக்கு எட்டு நாள்தான் லீவு.. சனிகிழமையும் ஆபிஸ்… இழுத்துகிட்டுக் கிடந்தாக்கூட மெடிக்கல் லீவுலே அனுப்ப மாட்டாங்க….அதுவே வாத்தியார் வேலைன்னு வைய்யி… மணியடித்த்தும் வீட்டை பார்த்து ஓடி வந்துரலாம்… சனிக்கிழமை லீவு… கால்பரிட்சை,அரைபரிட்சைன்னு லீவு.. இதுபோக முழுபரிட்சைக்கு முழுசா ஒரு மாதம் லீவு… இதுபோக மெடிகல் லீவு, ஈஎல் லீவுன்னு எம்ப்புட்டு லீவு தெரியுமா?,, எனக்கு போஸ்ட் ஆபிசிலே வேலை பார்க்கிற மாப்பிள்ளை வேணாம்… வாத்தியார் மாப்பிள்ளை தான் வேணும்……!”